Saturday, January 07, 2006

இடர் மேலாண்மை: எங்கிருந்து தொடங்குகிறது?


இந்தப் புத்தாண்டின் தொடக்கம் வரை, ஆழிப் பேரலையின் கோரத் தாக்குதல் -ஓராண்டு கடந்த பின்னரும்- நமக்குள் கனமான அசைவுகளை ஏற்படுத்தி வந்தது. இப்போதும்கூட நெஞ்சை உலுக்கிய அந்த நினைவுகளிலிருந்து இன்னும் பலர் விடுபடவில்லை. நம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்கூட, பின்தொடரும் அச்சத்தின் பிடியில் சிக்கியிருப்பது போல, அவ்வப்போது அந்தக் கருப்பு ஞாயிறை திரும்பிப் பார்த்தவாறே நடைபோடுகிறார்கள், இல்லை, நகர்கிறார்கள்.

நாகப்பட்டினத்திலும் கடலூரிலும் கன்னியாகுமரியிலும் சென்னையிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னும் தாற்காலிகக் குடியிருப்புகளிலேயே தங்கியிருக்கிறார்கள். சமீபத்திய அடை மழையில் சூழ்ந்த வெள்ளத்தால் இந்தத் தாற்காலிகக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்கள் பிறிதொரு தாற்காலிக இடத்தைத் தேடிச் செல்ல வேண்டிய அவலம் நேர்ந்தது. மத்திய - மாநில அரசுகளும் தன்னார்வக் குழுக்களும் உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் நிதியுதவியுடன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டதை மறுப்பதற்கில்லை. என்றாலும் பாதிக்கப்பட்டவர்ளின் மறுவாழ்வுக்கான அல்லது அவர்களின் எதிர்காலத்துக்குக் குறைந்தபட்ச உத்தரவாதம் அளிக்கும் நிரந்தர ஏற்பாடுகளை உருவாக்கும் முயற்சியில்-- நிதியிலிருந்து, நிவாரண உதவிகளைப் பெறும் மக்களின் உளவியல் சார்ந்த எதிர்வினைகள் வரை-- பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

சுனாமி நிவாரண நடவடிக்கைகளுக்குப் பின்னடைவு ஏற்படுத்துவது போல தமிழகம் தழுவிய கனமழையும் அதைத் தொடர்ந்த வெள்ளமும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணம் அளிக்கவும் சேர்த்து மொத்தம் 35,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். தமிழகத்தில் தொடர் கனமழை-வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம், சுனாமியின் பாதிப்பைவிட அதிகம் என்றும், இழப்பைச் சரிக்கட்டி மீண்டும் பழைய நிலையை எட்ட 1 லட்சம் கோடி ரூபாய் (!!!!) வரை தேவைப்படலாம் என்றும் -தினமணி- செய்தி கூறுகிறது. வெள்ளச் சேத நிவாரணத்துக்கு மட்டும் 13,000 கோடி ரூபாய் தேவை என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். எனினும் இதுவரை சுமார் 1000 கோடி ரூபாய்தான் தமிழக அரசின் கையை எட்டியிருப்பதாகத் தெரிகிறது.

சென்னையில் வெள்ள நிவாரணம் பெறச் சென்றவர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் முதலில் 6 பேர் பலியானார்கள். பிறகு தமிழகமே அதிரச்சியடையும் விதத்தில் 42 பேர் ஒரே சமயத்தில் மாண்டார்கள். கடைசித் தகவல் 43 என்று சொல்கிறது. ஆக மொத்தம் 49 பேர் வெள்ள நிவாரணத்துக்காகக் காத்திருந்து, இன்னொரு நிவாரணத்தை தங்கள் குடும்பத்துக்கு வழங்க வேண்டிய சோகத்தை உருவாக்கிவிட்டார்கள். நிவாரண வினியோகத்தை அரசு முன்னெச்சரிக்கையுடன் கையாளவில்லை என்றும், இல்லை, எதிக்கட்சித் தரப்பிலிருந்து பரவிய தவறான தகவல்தான் இந் நிலைமைக்குக் காரணம் என்றும் பதிலுக்குப் பதிலான குற்றச்சாட்டுகள், சூடான விவாதங்கள் ஒருபுறமிருக்கட்டும். அது தனியாகப் பேசப்பட வேண்டிய பிரச்சினை. இவ்விரண்டும் தவிர்த்து நிவாரணம் பெறுவதற்கு உரிய மற்றும் பெறுவதற்குச் சென்றவர்களின் தரப்பிலிருந்தே பிரச்சினையைப் பார்த்தால், முற்றிலும் வெளிப்படுத்த முடியாத கசப்புதான் மிஞ்சுகிறது.

வெள்ள நிவாரண நெரிசலில் அடிபட்டு காயத்துடன் பிழைத்த ஒரு ஆட்டோ டிரைவர், "யாரைக் குற்றம் சொல்வது..? எல்லாம் நாங்களாகப் போய்த் தேடிக் கொண்டது...!" என்று மனம் வெதும்பியிருக்கிறார். காலை 9 மணிக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தும் அதிகாலை 3.30 மணியிலிருந்தே மக்கள் கூடியிருக்கிறார்கள். நேரம் ஆக.. ஆக... எங்கே தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற படபடிப்பு எல்லோருக்குள்ளும் எகிறியிருக்கிறது. கூடவே, எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற வேகமும் கூடியிருக்கிறது. யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நிவாரணம் தேடி ஓடியிருக்கிறார்கள். மிதிபட்டவர்களின் கூக்குரல் யார் காதிலும் விழுந்தபாடில்லை. விழுந்தாலும் பொருட்படுத்தத் தயாரில்லை. அரசு அளிக்கும் நிவாரண உதவியின்றி நிலைமையைச் சமாளிக்க வல்லவர்கள்கூட நெரிசலில் கலந்திருந்தார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. எந்த அளவுக்கு அது உண்மையென்று தெரியவில்லை. "வருவதை விடுவானேன்..." என்ற சரிந்த மனத்தின் நீளம்தான் வரிசையையும் நீட்டி வரிசைப் பிறழ்வையும் ஊக்குவித்ததோ£..? அதுவும் தெரியவில்லை.

நெருக்கடியான காலங்களில் அரசாங்கம் அளிக்கும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்குரிய குறைந்தபட்ச ஒழுங்குக்கூட யாரும் தயாராக இல்லையெனில், பேரிடர் நிர்வாகம் என்பது இன்னொரு பேரிடரைத் தவிர்ப்பதற்கான போராட்டமாகத்தான் அமையும்.

அது சுனாமி நிவாரணமாகட்டும்... அல்லது வெள்ள நிவாரணமாகட்டும்... உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கான பங்கைத் தட்டிப் பறிப்பது போல, அத்தகைய பாதிப்புக்கு உள்ளாகாதவர்களும் பெற முனைவது நலிந்த மனத்தின் அடையாளமே. இவ்வாறே எண்ணிக்கை பெருகினால்... எந்த அரசாங்கமும் எதுவும் செய்துவிட முடியாது. ஒரு நிவாரண ஏற்பாட்டுக்கும் இன்னொரு நிவாரண ஏற்பாட்டுக்கும் இடையே தத்தளிப்பது அன்றி வேறொன்றும் சாத்தியமில்லை.

அரசியல்வாதிகள்தான் அத்தனைக்கும் காரணம் என்று பிழிந்த துணியையை மறுபடியும் மறுபடியும் பிழிய வேண்டிய அவசியமில்லை. அது தெரிந்த கதை. பிரச்சினைக¬ளை, மறுமுனையிலிருந்தும் பார்ப்பது கருத்து ஆரோக்கியத்துக்கு உதவும்.

ஆழிப் பேரலையின் தாக்குதலிலிருந்து கரையோரப் பகுதிகளைக் காக்கத் தடுப்புச் சுவர் கட்டுவது முதல்... இடர், பேரிடர் நிவாரண ஏற்பாடுகளில் வரிசையை நிலைநாட்டுவது வரை எல்லாமும் அரசாங்கத்தின் கடமை என்றால்,,, குடிமக்கள் கடமை ஏது?

குடிமக்களின் பங்கேற்பு இன்றி அரசாங்கம் வெற்றிகரமாகச் செயல்படுவது சாத்தியமில்லை. அவ்வாறே அரசாங்கத்தின் ஆதரவின்றி குடிமக்களின் நலனும் மேம்பட்டுவிட முடியாது.

ஆக, சிற்றிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை என்பது பாதிக்கப்பட்டவர்களின் மனத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களின் மனத்தையும் நோகாமல் பதப்படுத்துவதில் தொடங்குகிறது.
பேரிடர் மேலாண்மையில் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்க விரும்பும் ஒவ்வொருவரும் இவ்வாறே தொடங்கலாம்.

மற்றபடி... அதிகார வர்க்க மற்றும் அரசாங்கச் செயல்பாடுகள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்கள் எப்போதும் போலத் தொடரட்டும்.

எதற்கெடுத்தாலும் "கவர்மென்ட்" மீது பாய்வதில் அர்த்தமில்லை. அந்த "கவர்மென்ட்" முகம் என்பது நமது முகமும் சேர்ந்ததுதான் என்பதை மறந்துவிடக்கூடாது. "நமது அரசாங்கம்" என்பது நம்மைத் தவிர்த்த அரசாங்கமாக இருக்க முடியுமா...?

இனியும் இடர் கூடாது.

- சுகதேவ்
நன்றி: 'விழிப்புணர்வு' மாத இதழ்

2 comments:

மதுமிதா said...

வணக்கம் சுகதேவ்
வாங்க ப்ளாக் ஜோதியில் கலந்தாச்சா

சீக்கிரமா இது மாதிரி பதிவுகள் போடுங்க.

சீரியஸான பதிவுகள் படிக்க நம்ம மக்கள்
காத்திருக்கிறாங்க.

///நிரந்தர ஏற்பாடுகளை உருவாக்கும் முயற்சியில்-- நிதியிலிருந்து, நிவாரண உதவிகளைப் பெறும் மக்களின் உளவியல் சார்ந்த எதிர்வினைகள் வரை-- பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
///

இடியாப்பச் சிக்கல்கள் தீருமா???

///நெருக்கடியான காலங்களில் அரசாங்கம் அளிக்கும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்குரிய குறைந்தபட்ச ஒழுங்குக்கூட யாரும் தயாராக இல்லையெனில், பேரிடர் நிர்வாகம் என்பது இன்னொரு பேரிடரைத் தவிர்ப்பதற்கான போராட்டமாகத்தான் அமையும்.///

முற்றிலும் புதிய வேறு கோணத்திலிருந்து
தரப்பட்ட பார்வை இது. தேவையானவர்களுக்கு போய்ச்சேர வேண்டும்.

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு சுகதேவ்!
மக்களைக் காப்பது அரசின் கடமை எனினும், அரசோடு ஒத்துழைப்பது மக்களின் கடமை என்பதையும் மறுக்க முடியாது.

(ஒரு வருட தாமதமான பின்னூட்டம். இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். மதுமிதா அவர்கள் மூலம்)